காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பக்கோரி சென்னையைச் சேர்ந்த அக்பர் அகமது என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்னையில் அமைந்துள்ள பூக்கடை வடக்கு சரக காவல் மாவட்டத்தில் மட்டும் ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், 33 காவல் உதவிஆய்வாளர்கள் மற்றும் 393 காவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், சென்னையின் மற்ற காவல் மாவட்டங்களில் 791 காவல் அலுவலர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல் துறை காலிப்பணியிடங்கள் தொடர்பான வழக்கு - அரசு விளக்கமளிக்க உத்தரவு - நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு
சென்னை: காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரியும் காவல் துறை சீர்த்திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் காவல் துறையில் இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இதைவிட மோசமான நிலை இருக்கக்கூடும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். காவல் துறையினரின் சுமைகளை போக்கும் வகையில் 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காவல் துறை சீர்த்திருத்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புமாறும் தான் அளித்த மனு மீது உள் துறை செயலர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இவ்வழக்கை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.