தமிழ்நாடு பாஜக புதிய தலைவராக எல். முருகன் அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவர், சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்திற்கு வருகை தந்தார். பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பெண்கள் கும்ப மரியாதை செய்தும், விளக்கு ஏற்றியும் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பாஜக தலைமை இடத்திற்கு வந்த அவர் கட்சி கொடியை ஏற்றி, பலூன்களை பறக்க விட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னை மாநில தலைவராக நியமனம் செய்த நட்டா, அமித்ஷா, மோடி மற்றும் அனைத்து பாஜக தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
ரஜினியை பயன்படுத்திக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், ரஜினி கட்சி தொடங்கவிருப்பது அவரது உரிமை எனக் கூறினார்.
மத்திய அரசின் திட்டத்தால் அதிக அளவில் பயனடைந்தது தமிழகம்தான் என்றும், பாஜக கட்சியில் இருந்தால் எளிய நிலையில் இருந்தாலும் மிகப்பெரிய பொறுப்புக்கு வர முடியும் என்றார்.
மேலும், கடந்த ஆறு மாதமாக CAA குறித்து ஆதரவு பேரணி நடத்தியுள்ளோம். இளைஞர்கள் மோடியை நோக்கி வருகின்றனர், இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டோம் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இல கணேசன் மற்றும் பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டோம்