சென்னை: முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான இன்று, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, சென்னையில் மூன்று இடங்களில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே சேகர் பாபு உள்ளிட்டோர் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. விண்ணப்பங்கள் பதிவேற்றம், அதன் மீதான ஆய்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் துவக்க நாளுக்கு முன்னதாகவே சில பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்தப்பட்ட நிலையில் மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்:முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காஞ்சிபுரத்தில் அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கலைஞரின் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு, ஏடிஎம் அட்டையின் மாதிரியை வழங்கி திட்டத்தைத் துவங்கி வைத்தார்.
சேப்பாக்கத்தில் உதயநிதி:அதைத் தொடர்ந்து சென்னையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், தேனாம்பேட்டை மண்டலம், இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான அரங்கில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டையினை வழங்கினார்.