சென்னை:எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதலமைச்சரின் அறிவுறுத்தலில் படி கடந்த செப்.12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செப்.19 ஆம் தேதி இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 16 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஒன்றிய அரசிடம் கோரிக்கை
தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். அதனடிப்படையில் 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தன.