இதுகுறித்து அவர் கூறுகையில், “கரோனாவிலிருந்து தமிழ்நாட்டை காத்திட தம்மை மெய்வருத்தி உழைக்கும் முதலமைச்சர் எடப்பாடியாரின் இரவு பகல் பாரா தொண்டால், இன்று கரோனா நோயிலிருந்து குணமாவோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என்பதோடு, தடுப்பு மருந்தும், குணப்படுத்தும் மருந்தும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மனித குலத்தைக் காத்திட உலகமே போராடி வரும் காலத்தில், மரண சதவீதம் குறைவாக இருப்பதில் உலகிலேயே தமிழகமே முதலிடம். கரோனா பரிசோதனைக் கூடங்களை அதிகமாக அமைத்திருப்பதிலும் சராசரியாகச் சுமார் நாளொன்றுக்கு 15,000க்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகளை நடத்துவதிலும், தமிழ்நாடு முதலிடம்.
ஆனால், இத்தகைய இக்கட்டான தருணத்தில் அரசுக்குத் துணை நின்று ஆக்கம் கூட்டாமல், அவதூறு அறிக்கைகள் விடுத்து அற்ப அரசியல் நடத்தும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மனித நேயமற்ற செயல்கள் அருவருப்பின் உச்சமாகிவிட்டது. அதனைச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்தால் அதற்கான உரிய பதிலை அவர் சொல்வதற்குப் பதிலாக, முன்னாள் வரமிளகாய் வியாபாரியும், குடும்பக் கட்சியான திமுகவில் கருணாநிதி துணைவியார் கோட்டாவில் அரசியல்வாதி ஆகி, கொள்ளை அடிப்பதில் தங்க மெடல் வென்று அதன் வழியிலான ஊழல் வழக்குகளில் தலை தப்புமா என நீதிமன்றப் படிக்கட்டுகளில் தவம் கிடக்கும் ஊழல் பேர்வழியான நேருவை வைத்து பினாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திருவாளர் துண்டுச் சீட்டு.
கனிம வளங்களைக் களவாடுவதிலும், காவேரிக் கரையில் உள்ள மொத்த சொத்துக்களையும் அபகரித்துச் சுருட்டுவதிலும், தில்லை நகர் தொடங்கி, திருச்சியையே வளைப்பதிலும், பெரும் கொள்ளைக்காரக் குடும்பம் என்று பெயர் பெற்றதோடு, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையையே காய்லாங்கடையாக மாற்றியவர் நேரு என்பதை நாடு அறியும்.
மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும்தான் எதிர்காலத்தில் சிறை செல்லக் காத்திருக்கிறார்கள். அப்போது இந்த உத்தமர் நேரு மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் நிச்சயம் வெளிவந்துவிடும். மேலும், வக்ஃபு வாரியச் சொத்துகளை வளைத்து, பாசன வாய்க்கால்களைத் தூர்த்து, திருச்சியில் அறிவாலயம் அமைத்த விவகாரமும், நேருவும், அவரது தம்பிமார்களும் ஆடிய ஆட்டங்களால், கண்ணீர் விட்டுக் கதறி அழுத குடும்பச் சாபங்களும், நேருவையும் சேர்த்தே சிறைக்கு அனுப்பும் என்பது நிச்சயம்.