தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் உள்ள மத்திய அமைச்சர்களது அலுவலகங்களில் தனித்தனியே சந்தித்து நிலுவைத்தொகையை விடுவிப்பது தொடர்பான முதலமைச்சரின் கடிதத்தை அமைச்சர் வேலுமணி இன்று வழங்கினார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேலுமணி கூறியதாவது, ”மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், நரேந்திர தோமர், ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான நிர்மலா சீதாராமனைச் சந்தித்தபோது, மத்திய அரசு தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18, 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளில் விடுவிக்க வேண்டிய ரூ. 2,029.22 கோடி செயலாக்க மானியத் தொகை, ரூ.4,345.47 கோடி அடிப்படை மானியத் தொகை ஆகியவற்றை விடுவிக்க வலியுறுத்தினேன். இதுதொடர்பாக முதலமைச்சர் அளித்த கடிதத்தையும் நிதி அமைச்சரிடம் வழங்கினேன்.