தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழைய ஓய்வூதியத் திட்டம் இந்த ஆட்சியில் மீண்டும் கொண்டு வரப்படும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு நம்பிக்கை! - ஜாக்டோ ஜியோ கூட்டம்

'பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் பணியிலும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்' என தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 25, 2023, 7:33 PM IST

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன்

சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (TN JACTO) சார்பில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களின் வாழ்வாதாரமான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பினை ஒப்படைக்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் முன்பு போல் வழங்க வேண்டும்.

2004-06 ஆண்டு காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி இதுவரை கணக்கில் கொள்ளப்படாத தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்ற நீதிமன்ற ஆணையை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு செய்து, அந்த ஆணையை ரத்து செய்து மீண்டும் பழைய முறைப்படி விரைவாக பதவி உயர்வு வழங்க வேண்டும்" எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

மருத்துவர்களுக்கு உள்ளது போல் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி உள்ளதாகவும்; மேலும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் போதே, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரை நிதி அமைச்சர் அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளதாகவும், இதனால் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தியாகராஜன், "இந்த ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படவில்லை என்றால் வேறு எந்த ஆட்சியிலும் முடியாது. பழைய ஓய்வூதியத்திட்டம் கொண்டுவரப்படுவது குறித்து நிதி அமைச்சரிடம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவிற்கும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் நிலைப்பாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை.

ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்களின் மிகப்பெரிய கூட்டமைப்பில் எல்லோரும் ஒன்று தான். ஆனால் ஆசிரியர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதால், சிறிய சிறிய பிரச்னைகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு எதுவும் ஆகவில்லை. அது வலுவாக செயல்படுகிறது. தகுதித் தேர்வு முடித்தவர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்பது அரசுப் பள்ளிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, தனியார் பள்ளிகளிலும் செயல்படுத்தினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசாணை 149ஐ ரத்து செய்ய வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மீண்டும் உயர்ந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details