மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19 பரிசோதனைக்கு தடை! - undefined
சென்னை: தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19 பரிசோதனை செய்யக்கூடாது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கோவிட்-19 என்ற தொற்றுநோய் 114 நாடுகளில் பரவி உள்ளதால், உலகளாவிய பொது சுகாதார அவசர நிலை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றி, தடுக்கவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்குதலை தொற்றுநோய் பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளது.கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அவை பின்வருமாறு,
- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர், ஊரக மருத்துவ பணிகள் இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள், மாவட்ட ஆட்சியர், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளாக செயல்படுவார்கள்.
- மாவட்ட அளவில் சுகாதாரத் துறையால் கோவிட்-19 கட்டுப்படுத்துவதற்கான அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர். அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா தொற்று நோய் அறிகுறிகளுடன் வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான அறைகள் அல்லது வார்டினை ஏற்படுத்தி வைக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ள நாடுகளிலிருந்து வரும் அனைவரும் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். பயணிக்கு தொற்று உள்ளதாக சந்தேகமடைந்தாலோ அல்லது உறுதி செய்யப்பட்டாலோ அவருடன் வந்தவர்களையும் கண்காணிக்க வேண்டும்.
- மத்திய அரசின் மூலம் அவ்வப்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி சிகிச்சை வழங்க வேண்டும். கோவிட்-19 அறிகுறியுடன் மருத்துவமனைக்கு யார் வந்தாலும் உடனடியாக மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- நோய்தொற்று அறிகுறி உள்ளதாக சந்தேகப்படும் நபர்களை 14 நாள்கள் மருத்துவமனையில் தனிப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவரின் பரிசோதனை முடிவுகள் ஆய்வகங்களிலிருந்து வந்துவிட்டால் அதனடிப்படையில் முடிவெடுத்துக் கொள்ளலாம்.
- ஒருபகுதியில் கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அதனை பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதற்காக குறிப்பிட்ட அப்பகுதிக்குள் செல்வதை தடை செய்யலாம், அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதையும், வெளியிலிருந்து உள்ளே செல்வதையும் தடை விதிக்கலாம். அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகள் அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை மூடலாம்.
- அப்பகுதியில் வாகன நடமாட்டத்தை முற்றிலுமாக நிறுத்தலாம். அரசுத்துறை அலுவலர்கள் யார் வேண்டுமானாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த கட்டடத்திற்குள் சென்று பணிபுரியலாம் ஆகிய அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
- மேலும் தேவைப்படும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்வதோடு தனியார் ஆய்வகங்களில் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.