கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர், முட்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை, திருவட்டர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஆகிய மூவரும் காய்ச்சல், இருமல் காரணமாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் இன்று கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த மூவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மருத்துவமனையில் உயிரிழந்த இரண்டு வயது குழந்தை பிறவி எலும்பு நோயினாலும், 66 வயது ஆண் சிறுநீரக பிரச்னையினாலும், 24 வயது ஆண் நிமோனியா தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாகவும் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.