சென்னை:சட்டப்பேரவை வளாகத்தில் வியாழன் அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "போதைப்பொருட்கள் யார் ஆட்சியில் கூடுதலாக இருந்தது என்பது அவர் அறியாததா? என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் கஞ்சா எங்கேயும் பயிரிடப்படவில்லை எனவும்
எங்கே பயிரிடப்படுகிறது என அவர் தெரிவித்தால் பறிமுதல் செய்ய வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் போதை வஸ்துக்கள் தாராளமாகக் கிடைத்தது. கடைகளில் பான், குட்கா விற்பனையைக் கண்டித்து 11 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் காட்சிப்படுத்தியபோது, உறுப்பினர்கள் பதவியை பறிப்பதில் தான் குறியாக இருந்தார். அவர்கள் கஞ்சா குறித்து பேசுவது விந்தையாக இருக்கிறது.போதைப்பொருள் இல்லாத நிலை உருவாக்க மாணவர்களிடம் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா வருகிறது. தமிழக ஏடிஜிபி தெலுங்கானா மாநிலத்தில் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்படுகிறது என்ற தகவலைத் தெரிவித்ததால் 6 ஆயிரம் ஏக்கர் கஞ்சா அழித்தொழிக்கப்பட்டது என கூறிய அவர் 4000 கோடி மதிப்பு கஞ்சா அழிக்கப்பட்டதற்குத் தமிழக காவல்துறை காரணமாக அமைந்தது என தெரிவித்தார்.
போதை வஸ்துக்களிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டுள்ளது. குட்கா பான் பொருட்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து வந்ததை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. கொலை சம்பவங்களைக் கஞ்சா அடித்து கொலை செய்திருப்பதாக எடப்பாடி கூறுகிறார். இவர் ஏதாவது அவர்களுக்குப் போட்டுக் கொடுத்தாரா என்ற கேள்வியை எழுப்ப தோன்றுகிறது என சாடினார்.