சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் மருந்தாளுநர் பணியிடங்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகத்தின் மூலம் நியமிக்கப்படுகிறது.
கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்காக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மருத்துவர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல் செவிலியர்களும், மருந்தாளுநர்களும் தொகுப்பூதிய அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். அப்போது மருத்துவர்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.
குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள். காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததால், நற்காலம் பிறக்கும் என காத்திருந்த தொகுப்பூதிய ஊழியர்களுக்குச் சோகம் தான் மிஞ்சியுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிட்டுள்ள அரசாணையில், "மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் துறை இயக்குநர் கரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையைப் போக்க ஆறுமாதத்திற்கு தற்காலிக அடிப்படையில், வருங்காலத்தில் நிரந்தரப்படுத்த உரிமை கோரக் கூடாது என்ற அடிப்படையில் நியமனம் செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனுமதித்துள்ளார். இவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்" என குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, "550 மருந்தாளுநர் பணியிடங்களில் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் ஆறு மாதத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்து கொள்ளலாம்.
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. வருங்காலத்தில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய எந்த விதத்திலும் உரிமை கோர முடியாது. இந்தப் பணியில் நியமனம் செய்யப்படுபவர்கள் மருந்தாளுநர் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து தங்கள் பதிவினை ஆண்டுதோறும் புதுப்பித்தவர்களாக இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நீதிமன்ற அவதூறு: முன்பிணை கோரிய ஹெச். ராஜாவின் வழக்கு ஒத்திவைப்பு