சென்னை: தமிழகத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக நாளை (டிச.11) தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வின் தேதிகளை மாற்றி அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், "மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுரைகளின்படி, 'மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, நாளை (டிச.11) பள்ளி திறக்க உள்ள நிலையில், நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இவற்றைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.