சென்னை: திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2022 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிக்கப்பட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது எனவும்; எனவே, தமிழ்நாடு அரசு நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் (Tamil Nadu Graduate Teachers Association) பொதுச்செயலளார் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலளார் பேட்ரிக் ரெய்மாண்ட் இன்று (ஜன.1) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'சம வேலைக்கு சம ஊதியத்திற்காக (Equal Pay for equal Work) போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் (TN Teachers Hunger strike in Chennai) கோரிக்கைகளை ஆய்வு செய்வதற்கு நிதித்துறை செயலாளர் (செலவினம்) தலைமையில் தமிழ்நாடு அரசு, குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், குழுவிற்கான கால வரையறை நிர்ணயம் செய்து நியாயமான கோரிக்கைகளை முறையாக பரிசீலித்து, மேலும் கால தாமதம் செய்யாமல் தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை உணர்ந்து 2009-ல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
அகவிலைப் படியில் பாரபட்சம்: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு ஜனவரி 2023 முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு பின்னர், ஒன்றிய அரசு ஜூலை 2021 முதல் அகவிலைப் படி உயர்வு வழங்கியது. தமிழ்நாடு அரசு ஜூலை 2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயர்வை ஏப்ரல் 2022 முதல் வழங்கப்படும் என அறிவித்தது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் இருந்து வந்த கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்தார். அதில் 6 மாதம் அகவிலைப்படி பறிக்கப்பட்டது.
மேலும் ஒன்றிய அரசு, ஜனவரி 2022 முதல் 3% அகவிலைப்படி உயர்வினை வழங்கியது. இவ்வாறு, தமிழ்நாடு அரசு ஆறு மாதங்கள் காலம் தாமதமாக 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் வழங்கியது. இதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆறு மாதம் அகவிலைப் படி உயர்வினை இழந்தார்கள்.