சென்னை:கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த விதியைப் பின்பற்றாமல் கல்லூரிகளில் பேராசிரியர்களைப் பணிக்கு வர வேண்டுமென வற்புறுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன.
இதையடுத்து, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுப்பிய கடிதத்தில், "அரசின் உத்தரவை மீறி, பெரும்பாலான கல்லூரிகள் பேராசிரியர்களை ஆன்லைன் வகுப்பு எடுக்க கல்லூரிகளுக்கு வரவழைப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
வகுப்பு எடுக்கவோ, என்ஏசிசி சார்ந்த பணி அல்லது இதர பணிகளுக்காகவோ பேராசிரியர்களை, கல்லூரிகளுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது.
தற்போதைய பெருந்தொற்று சூழலைக் கருத்தில்கொண்டு, பேராசிரியர்களை நிர்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அரசின் உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்" என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது.