சென்னை:நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுக எம்.எல்.ஏ.எழிலனின் 'அறம் செய்ய விரும்பு' அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று (நவ.8) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எந்த நோக்கத்துக்காக, காரணத்துக்காக இந்த அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவிக்கப்படவில்லை எனவும், 1978-ல் 45ஆவது அரசியல் சாசன திருத்தம் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது, கல்வி மீண்டும் மாநில பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
டெல்லி அதிகாரிக்குள்ள அதிகாரம்;மாநில அரசுக்கு இல்லையா? கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது எனவும், கல்வியை மாநில பட்டியலில் இருந்து நீக்கி, பொதுப்பட்டியலில் சேர்த்தது கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது என வாதிட்டார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் எந்த மாநிலமாக இருந்தாலும் கல்வி சம்பந்தமாக இயற்றும் சட்டங்களை, டெல்லியில் உள்ள அதிகாரி செல்லாததாக்க முடியும் என்பதால் இந்த திருத்தம் கூட்டாட்சிக்கு எதிரானது என்றார். லத்தீன், கிரேக்க மொழிகளுக்குப் பின், தொன்மையான மொழியான சமஸ்கிருதத்தை ஒரு மொழியாக கற்பித்துக் கொடுக்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதால், கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் வரை கூட்டாட்சி கொள்கை முழுவதுமாக கைவிடப்படுகிறது எனத் தெரிவித்தார்.
அரசியல் சாசன நிர்ணய சபை:என்சிஇஆர்டி (NCERT) பாட திட்டத்தின் அடிப்படையில் மாநில பாடத்திட்டத்தை வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதும், கூட்டாட்சி கொள்கைக்கு விரோதமானது எனவும், அரசியல் சாசன நிர்ணய சபையில் கல்வி மாநில பட்டியலில் இருக்கவேண்டியது அவசியம் என விவாதங்கள் நடந்ததாக சுட்டிக்காட்டிய அவர், பொதுப்பட்டியலில் கல்வி இருப்பது அதன் நலனுக்கு விரோதமானது என்பதால் இந்த திருத்தங்களை ரத்து செய்யவேண்டும் எனக் கூறி வாதங்களை நிறைவு செய்தார்.
அக்கறைக் கொள்ளவேண்டியது பெற்றோரே: தொடர்ந்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், குழந்தையின் கல்வி குறித்து அக்கறை கொள்பவர் பெற்றோர் தான் எனவும், எந்த மொழியில் குழந்தையை படிக்க வைக்கலாம் என பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, மாநில அரசு அல்ல எனவும், குழந்தையை பள்ளியில் சேர்க்க மட்டுமே மாநில அரசு வகை செய்யலாம் எனவும் வாதிட்டார்.
குழந்தைக்கு தெரியாத மொழியில் கல்வி?: குழந்தைகள் 'இந்தி' தான் படிக்கவேண்டும் எனக் கூறினால், அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், குழந்தைக்கு தெரியாத மொழியில் கல்வியை திணிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றார். உயர் கல்வியின் தரம் குறித்து தீர்மானிக்க மட்டுமே, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், மத்திய அரசின் தலைமைச் செயலகமான டெல்லி நார்த் பிளாக்கில் இருந்துகொண்டு, நாட்டில் உள்ள குழந்தைகள் குறிப்பிட்ட மொழியில்தான் படிக்கவேண்டும் என முடிவெடுக்க முடியாது என்றார்.