சென்னை: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும் அரசியல் கட்சி தலைவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை வீடியோக்கள் வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் L.K.சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்த கொச்சையான விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (அக்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் P.முத்துக்குமார் ஆஜராகி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், சமூக வலைதளங்களை கண்காணிக்கும் வகையில் அதன் நுணுக்கங்களை அறிந்த குழுக்களை அமைக்க வேண்டுமென கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு அதே ஆண்டு மார்ச் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.