இரு சக்கர வாகன ஓட்டிகள், அவர்களுடன் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கக் கோரியும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரியும், கொரட்டூரை சேர்ந்த கே.கே ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்துத் துறையின் முதன்மை செயலர் ஜவஹர், காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐஜி சாம்சன் ஆகியோர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2019 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 68 லட்சத்து 76 ஆயிரத்து 452 பேர் மீதும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 15 லட்சத்து 90 ஆயிரத்து 382 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.