கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில சுகாதாரத்துறை சார்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் நிச்சயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், '' வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு தமிழ்நாடு திரும்பிய பயணிகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட 9424 பேரின் இல்லங்களில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி இன்று இரவுக்குள் முடிவடையும். சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 35 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 12 ஆயிரத்து 519 பேர் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் இல்லங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் வேகமாக நடந்துவருகிறது.
தனிமைப்படுத்துவதற்காக 9 ஆயிரத்து 266 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதில் இதுவரை 89 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் அறிகுறியுடன் இருந்த பயணிகளில் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 552 பேரில் 9 பேருக்கு கரோனா வைரஸ் உறுதியானது. அதில் ஒருவர் கரோனா வைரசிலிருந்து குணமாகி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். மீதமுள்ள 40 பேரின் பரிசோதனைகள் செயல்பாட்டில் உள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முகக்கவசம் தட்டுப்பாடு? - திமுக எம்.பி. கேள்வி