இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணை மிகவும் வரவேற்கத்தக்கது.
அரசின் இந்த முடிவு ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடியது. ஆனால், அதேநேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இந்த இட ஒதுக்கீட்டில் கொண்டு வராதது இட ஒதுக்கீட்டின் பயன் ஏழைக் குழந்தைகளுக்கு முழுமையாகக் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஒட்டுமொத்த சதவீதத்தைக் கணக்கில் கொண்டு இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது என்பது அவசியமானது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அரசு வெளியிட்டுள்ள ஆணையில், அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் மற்றும் சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாநில இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் அரசு உதவிபெறும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படாதது கடந்தகால நடைமுறைகளுக்கு முரணாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளிடம் பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்துள்ளது.
அரசே பள்ளிகளைத் தொடங்குவதற்கு இயலாத நிலையில் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிபதற்காக அரசுப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் கல்வியின் மீது அக்கறை கொண்டவர்களால் அரசு உதவியுடன் தொடங்கப்பட்டவை தான் அரசு உதவி பெறும் பள்ளிகள்.