சென்னை:வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதையடுத்த இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவத்துள்ளது. மேலும் நிர்வாகம் மற்றும் மீட்பு பணிகளுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கபட்டுள்ளது.
தயார் நிலையில் இருக்கும் மீட்பு பணிகள்: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "எந்தெந்தப் பகுதிகளில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்பகுதிகளுக்கு மீட்புக் படைகளை அனுப்பி வைத்திருக்கிறோம். புயலால் சேதம் அடையும் மரங்கள், மின்கம்பங்களை விரைந்து அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க தயார் நிலைகளில் உள்ளன.
437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அமைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. மேலும், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மழைப்பாதிப்பு அதிகாமக இருக்க வாய்ப்பிருப்பதால், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மொத்தம் 435 பேர் தயார் நிலையில் உள்ளன" எனத் தெரிவித்தனர்.
ஆயத்தமான தமிழ்நாடு பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 17 சிறப்பு குழுக்கள்:தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை சார்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அவரவர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
மாநகர காவல் துறை சார்பில் முதல்முறையாக அறிமுகம் கண்ட 'மெடிக்கல் ரெஸ்பான்ஸ் குழு':மாநகர காவல் துறை சார்பில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பை எதிர்கொள்ள சென்னை மாநகர காவல் துறையின் மீட்பு படையினர் தயார்நிலையில் உள்ளன. மேலும், 12 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளன. ஒரு குழுவிற்கு 10 வீரர்கள் என 120 வீரர்கள் அந்தெந்த காவல் மாவட்டத்தில் லைஃப் ஜாக்கெட், லைஃப் போட், மரம் அறுக்கும் கருவி, நீர் உறிஞ்சி பம்புகள் போன்றவைகளும் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. மேலும், 18 ஆயிரம் போலீசார்களும், 3 ஆயிரம் போக்குவரத்து போலீசார்களும் போக்குவரத்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இம்முறை முதல் முறையாக மெடிக்கல் ரெஸ்பான்ஸ் குழு ஒன்றை அமைக்கபட்டிருக்கிறது. மாநகராட்சி உள்ளிட்ட பல துறைகளுடன் இனைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல பிரத்யேகமாக வழித்தடங்கள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னையில் எங்கெங்கு தண்ணீர் தேங்கும் மற்றும் மழையை கண்காணிக்க மாநகராட்சியுடன் இணைந்து கண்ண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகின்றன என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது.
ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறு வானிலை மையம் எச்சரிக்கை:நாளை(டிச.3) காலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 03.12.2023 மாலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, 04.12.2023 மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும் என்பதனால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.