சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் (Chennai Metro Rail Project) 5ஆவது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த கவுதமன் உள்பட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், 'எந்த அனுமதியும் பெறாமல், கோயிலில் ராஜகோபுரம் மற்றும் கொடிமரம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் 15 அடி நிலத்தை கையகப்படுத்தும் வகையில் எல்லை வரையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணியின்போது, புராதன கோயில்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், சட்ட விதிகளையும், ஆகம விதிகளையும் பின்பற்றாமல் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைத்தும், சாலை விரிவாக்கம் செய்தும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்' என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.