சென்னை:பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது, தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக, மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் ஒரு திட்டத்தை, நாட்டிலேயே முதன்முறையாக கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வலைத்தளப் பக்கத்தில், இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும், தேசிய கல்விக் கொள்கையில் கட்டாயமாக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு விரைவில் பரிசீலிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் தரும் விதமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து, அன்றே கணித்துச் சொன்னவர் பெரியார். இதன் தொடர்ச்சியாக 1997-லேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி, அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார்.
இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப் ஆக மாறியது. இன்றைக்கு பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்திற்கும், அன்றே வித்திட்டது தமிழகத்தில் இதற்கென உருவாக்கபட்ட தனிக்கொள்கைதான். அதனைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை, தமிழ்நாட்டில் 2020-இல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை, தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. எடுத்துக்காட்டாக, தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.