பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாயுடன், பச்சரிசி, வெல்லம், கரும்பு அடங்கிய பரிசுத்தொகுப்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்காக, 2 ஆயிரத்து 363 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்ற அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ' பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் நியாய விலைக்கடைகள் கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 குடும்ப அட்டைகளுக்கும் மேல் உள்ள நியாய விலைக் கடைகளில், சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும். நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தெரியும் வண்ணம் விளம்பரப் பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.