சென்னை:தூத்துகுடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறப்பது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அரசே கைப்பற்றி இயக்கலாமா அல்லது வேதாந்தா நிறுவனத்திற்குத் தற்காலிக அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி, அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர்செய்து தற்காலிகமாக நான்கு மாதங்களுக்கு மட்டும் இயக்கிக் கொள்ள தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம்.
ஆக்சிஜன் தேவையைக் கருத்தில்கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். தொழிற்சாலையின் பிற உற்பத்தி அலகுகள் எக்காரணம் கொண்டும் இயங்க அனுமதிக்கப்படாது.
உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.
ஆக்சிஜன் உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும்.
இதனைக் கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். கண்காணிப்புக் குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆக்சிஜன் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுசூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள், ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்புக் குழுவில் இடம்பெறுவர் எனத் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இக்கூட்டத்தில் திமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எட்டு கட்சிப் பிரதிநிதிகளும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சன், டிஜிபி திரிபாதி ஆகியோரும் பங்கேற்றனர்.