சென்னை: அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த தினத்தன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற போது ஏனையவற்றுக்கிடையே, அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை பின்வரும் அறிவிப்பினை செய்துள்ளார்.
சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல், இனிவரும் காலங்களில் டாக்டர் மு.கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கடிதத்தில், குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல், இனிவரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்க ஆணை வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், சமூக நல இயக்குநரின் கடிதத்தில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணை வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் / சமூக நல இயக்குநரின் கருத்துருக்களை கவனமுடன் பரிசீலனை செய்து. அவற்றை ஏற்று. குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு, டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கவும்; குழந்தைகள் மையங்கள் / சத்துணவு மையங்களில் பயனடைந்துவரும் குழந்தைகளுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதரபொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசு ஆணையிடுகிறது.
மேலும், ஆணையினை செயல்படுத்துமாறு வட்டாரங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக தக்க அறிவுரை வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலாளர் / ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், சமூக நல இயக்குநர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த இரு சம்பவங்கள் குறித்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும்: முதலமைச்சர்