சென்னை: தமிழகத்தில் உள்ள கடல்வளத்தை பாதுகாக்க, தமிழக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் இணைந்து ரூ.1,675 கோடி செலவில், கடற்கரை மறுசீரமைப்பு பணி திட்டத்தை "நெய்தல் மீட்சி இயக்கம்" என்ற பெயரில் விரைவில் தொடங்க உள்ளது.
அதன்படி, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பை தடுக்கவும், கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத் தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டம் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில், உலக வங்கி நிதி உதவியுடன் (2024-2029) வரும் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
கடல்வாழ் பல்லுயிர்கள் அதிகரித்தல்: கடற்கரை மற்றும் கடல் வாழ் பல்லுயிர்களைப் பாதுகாத்து, அதனை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும், கடம்பூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ரூ.345 கோடி செலவில் பல்லுயிர் பாதுகாப்பு காப்பகங்கள் அமைக்கப்படும்.
மேலும் ரூ.60 கோடி செலவில், கடலாமைகள் பாதுகாப்பு மையம் நாகை மற்றும் சென்னையில் அமைக்கப்படும். ரூ.90 கோடி செலவில், சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் தஞ்சையில் அமைக்கப்படும். ரூ.275 கோடி செலவில், சதுப்பு நிலத்தை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்டவை இதில் அடங்கும். மொத்தம் ரூ.770 கோடி செலவில் திட்டம் செயல்பட உள்ளது.
கடலோர பகுதிகளை பாதுகாத்தல்: கடலோர பாதுகாப்புத் திட்டக் கூறில் அலையாத்தி காடுகள், கடற்புற்கள் போன்றவை ரூ.240 கோடி செலவில் பாதுகாக்கப்படும். ரூ.50 கோடி செலவில், மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளை பாதுகாத்தல், கடலோர பாதுகாப்பிற்காக ரூ.50 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
3 முதல் 5ஆம் திட்டக்கூறு: நீலக் கடற்கரை, நிலையான சுற்றுலா போன்றவையும், நெகிழி இல்லா இடத்தை உருவாக்குதல், ஆறுகளை பாதுகாத்தல், எண்ணூர் முகத்துவாரத்தை சீர்செய்தல், கடலோர கிராமங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இதற்காக ரூ.560 கோடி செலவிடப்பட உள்ளது.
உலக வங்கி பங்கு: இந்த ஐந்து திட்டங்களும் 2024 - 2029 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நிதி வழங்கப்பட உள்ளது. இதில், 70 சதவீதம் உலக வங்கி நிதியும், 30 சதவீதம் தமிழக அரசு நிதியும் இணைந்து செயல்பட உள்ளது. இதில் உலக வங்கியில் இருந்து ரூ.1,172.5 கோடியும், தமிழக அரசில் இருந்து ரூ.502.5 கோடி ரூபாயும், இதில் இணைந்து இந்த திட்டங்களைச் செயல்படுத்தபடுவதாக உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழக கடலோர மறுசீரமைப்புத் திட்டம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுள் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதற்காக, நெய்தல் மீட்சி இயக்க திட்டத்தின் மூலம் கடலோர மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கையை தமிழக அரசு அரசானையாக வெளியிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிகாரம் இருந்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி