இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு தொழில் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசுப் பள்ளிகளில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வனத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் ஆகியவை அடங்கும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்து, உயர் கல்வியை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் அரசுப்பள்ளி மாணவர்களாகவே கருதப்படுவார்கள். மருத்துவம் பல்மருத்துவம் மற்றும் நீட் தேர்வு தகுதி மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். தொழிற்படிப்புகளுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.