சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகையான 'ஆசிரியர்கள் நேரடி நியமனம்' செய்வதற்கான உச்ச வயது வரம்பினனை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்.22) வெளியிட்ட தகவலில், '04.10.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது, அரசாணையையும் வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். #திராவிட_மாடல்' என கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த ஆசிரியர்கள் தங்களுக்கு திமுக தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, பணி நியமனத்திற்கான அரசாணை 149 ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி (TET) பெற்ற கூட்டமைப்புடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு கூறிய வயது வரம்பு உயர்த்தப்படும் என உறுதி அளித்திருந்தார். அதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், ஏற்கனவே ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும் சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் உயர்த்தியும், இந்த உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.