சென்னை: தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கோரி, லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளில் தன்னையும் இணைத்து கொள்ளக்கோரி அதிமுக தலைமை கொறடா எஸ்.பி.வேலுமணியும் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சட்டப்பேரவை செயலாளரின் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், சபாநாயகரின் ஒப்புதலுடன், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்ளுக்குப் பதில் அளிப்பது, அரசு 110 விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் என அனைத்தும் சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது தவிர யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளம் மூலமாகவும் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து சட்டமன்ற நிகழ்வுகள் படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2022 ஜனவரி 6ஆம் தேதி முதல் கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாகவும், 2023 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மற்றும் முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் முதலியன நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதாகவும் கூடுதல் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர, பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து சில மணி நேரங்களில் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் வழங்கப்படுவதாகவும், அதில் முக்கிய தலைவர்கள், எதிர்க்கட்சி உள்ளிட்ட உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு 44 லட்சத்து 65ஆயிரத்து 710 ரூபாய் நிதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நேரடி ஒளிபரப்புக்காக ஆப்டிக் பைபர் கேபிள் அமைக்கும் நடைமுறையை தூர்தர்ஷன் துவங்கியதாகவும், இப்பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளதாகவும் கூடுதல் பதில்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஒளிபரப்புவதாகவும், கேள்வி நேரத்தின்போது கேட்கப்படும் கேள்விகளை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள் பதில் அளிப்பதை மட்டும் ஒளிபரப்புவதாகவும் கூறினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தனியாக ஒரு மனுதாக்கல் செய்துள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையில் சபாநாயகரின் முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்ற போதும், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்படி சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுவதாக கூறிய தலைமை நீதிபதி, வழக்குகளின் விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விரைவில் விவாதம்.. தப்புமா பாஜக அரசு! நடைமுறை என்ன?