சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட வரதம்மாள் கார்டன் மற்றும் பராக்கா சாலையில் இயங்கி வரும் கரோனா தடுப்பு மருத்துவ முகாம்களை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார்.
அப்பகுதிகளில் களப்பணியாற்றும் தன்னார்வலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர், சித்தா மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து, ஓட்டேரியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் உயிரிழந்த முதியவரின் உடலை அடக்கம் செய்த காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " உலகளவில் ஒரு கோடி பேர் பாதிப்படைந்துள்ள நிலையிலும் முறையான மருந்து இல்லாததால் கரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்காக சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
திருவிக நகர் மண்டலத்தில் இதுவரை நான்காயிரத்து 387 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது ஆயிரத்து 496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை தன்னார்வலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கவனித்து வருகின்றனர். திருவிக நகர் மண்டலத்தில் 50 மருத்துவ முகாம்களில் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நோய்த் தொற்று மிகப்பெரிய சவாலாக உள்ளதால் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம், வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவி முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
தொற்று ஏற்பட்டதற்கு யார் காரணம் என விவாதம் செய்ய வேண்டிய நேரம் இது இல்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை தடுப்பு துறை மூலம் கரோனா பரவலை தடுக்கும் பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.
சித்த மருத்துவ முறைகளை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்து சென்றுள்ளோம். தேவைக்கேற்ற பகுதிகளில் சித்த மருத்துவ முறைகளை சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.
உண்மையான சிகிச்சை மற்றும் கட்டாய தேவைகளுக்கு மட்டுமே ஊரங்கில் தளர்வு அளிக்கப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது” என்றார்.