சென்னை:தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முன் முயற்சியால் தமிழ்நாட்டில் புதிய புரட்சிகர திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை (ஆக.5) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.
இதனையடுத்து, சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சை வழங்குவதற்கு இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 'நம்மைக் காக்கும் 48' என்ற திட்டம் மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறையை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து முதலமைச்சர் அறிவித்தார். முதலமைச்சர் இந்தத் திட்டத்தை டிசம்பரில் தொடங்கிவைத்தார்.
இதற்காக 609 மருத்துவமனைகளில் 204 நெடுஞ்சாலைகள் ஒட்டியுள்ள அரசு மருத்துவமனைகளும், 405 தனியார் மருத்துவமனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
எந்த நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாய் அரசு வழங்கி, விபத்தினால் காயமுற்றவரைக் காக்கும் சிகிச்சைக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.