சென்னை:கோயம்புத்தூர்வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ‘ஈஷா’ யோகா மையத்தில் ‘ஆதியோகி’ சிலை அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் வனப்பகுதியில் சிவராத்திரியின் போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது, அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். 2017ஆம் ஆண்டில் தமிழ்நாடு நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விதிமீறி கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் கடந்த 2012ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவும், இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.24) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களுன் தங்கள் அலுவலகத்திலோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை என தெரிவிக்கப்பட்டது.