இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை திறக்கப்படாது என பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி இறுதி பருவத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
மேலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின் படி செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் ஆன்லைன், எழுத்துத் தேர்வு, ஆன்லைன் மற்றும் எழுத்து தேர்வு இந்த முறைகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கரோனா பாதுகாப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்த அரசு அனுமதி அளிக்கிறது. 2019-20ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இறுதி தேர்வினை மாணவர்கள் எழுத அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 22 முதல் 29ஆம் தேதி வரையும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 7 வரையிலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21 முதல் 25ஆம் தேதி வரை ஆன்லைன் முறையிலும், காரைக்கால் மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மற்றும் எழுத்துத் தேர்வு முறையில் செப்டம்பர் மாதம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.