கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் அறிவித்துள்ளார்.
இந்த வேல் யாத்திரைக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பாலமுருகன், செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல்செய்துள்ளனர்.
அதில், "தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தும்போது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதால் தொற்று விரைவாகப் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், இந்து பெண்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய மனுதாரர்கள் அதேபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை மீண்டும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும். யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது" எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கை வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அனுமதி மறுப்பு குறித்து அரசின் விளக்கத்தை அளித்தார்.
வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு அக். 15ஆம் தேதி அன்று காவல் துறைத் தலைவருக்கு பாஜக பொதுச்செயலாளர் மனு கொடுத்தார். சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிபாளர்களை அணுகும்படி அக். 17ஆம் தேதியன்று காவல் துறைத் தலைவர் பதிலளித்து உள்ளார்.
மனுக்கள் வந்தால் சூழ்நிலையைப் பொறுத்து முடிவெடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. திருவள்ளூரில் பாஜக அளித்த மனுவில் கூட்டம் நடத்துவது போல மனு கொடுக்கபட்டுள்ளது, ஆனால் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என விவரங்கள் இல்லை.
ஊரடங்கிற்கு முன்பாக அக்டோபர் 20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கரோனா கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு எடுத்துவருவதைக் கருத்தில்கொண்டு, பேராட்டம் அல்லது பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் நவம்பர் 16 வரை அதிகப்படியாக 100 பேர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
கரோனாவின் இரண்டு, மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என முட்வெடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து பாஜகவுக்கு தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் குறிப்பிட்டு எந்தப் பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கவில்லை. மத்திய அரசு, தனி மனித விலகலை பின்பற்றவே அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்று குறைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. யாத்திரையின் போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப் போவதில்லை.
பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் யாத்திரைக்கு தடை விதிப்பது சரியல்ல என தெரிவிக்கப்பட்டது. எந்த விதிகளையும், நிபந்தனைகளையும் மீறப் போவதில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். யாரும் கூட்டமாக கூடப் போவதில்லை என தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதிகள், பாஜகவின் வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்க முடியாது. நவம்பர் 15 வரை இதுபோன்ற எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவதா, வேண்டாமா? என்பதை மாநில அரசு முடிவு செய்யலாம் என உத்தரவிட்டு யாத்திரைக்கு தடை கோரிய வழக்குகளை முடித்துவைத்தனர்.