சென்னை: தமிழ்நாடு அரசு இன்று (டிச.24) வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'தொழில் துறையின் 2021-22-ம் ஆண்டைய மானியக் கோரிக்கையை முன் வைத்து பேசும் போது நீர்வளத்துறை அமைச்சர் "குவாரிப்பணிகளில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுகை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தொடர்பான திட்டங்களை முதலமைச்சர் ஆய்வு செய்தபோதும், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள், மற்றும் குவாரிப் பகுதிகளிலுள்ள குடியிருப்புகள், மற்றும் பிறவற்றை பாதுகாக்கும் பொருட்டு தற்போதுள்ள விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தூரத்தை நீட்டித்து 1959-ம் ஆண்டைய தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிககளில் திருத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, தொழில் துறையில் 03.11.2021 நாளிட்ட அ.ஆ(நிலை) எண் 295-ல் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள்-1959-ல், விதி 36(1-A)-ன் கீழ் புதிய துணை விதி (e) இணைக்கப்பட்டு தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக்காடுகள் (Reserve Forest) போன்ற பகுதிகளிலிருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்பட தடுக்கப்பட்டது. "காப்புக்காடுகள்" எனும் தொடர் குறிப்பாக அறிவிக்கப்படாத நிலையில் மேற்காணும் துணைவிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தடையின் காரணமாக பெரும் சிரமத்திற்கு உள்ளான மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினைஞர்கள், மட்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் சிற்பிகள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து, 2022-23-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, 19.04.2022 அன்று நீர்வளத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றும் போது, மேற்குறிப்பிட்ட விதியின் காரணமாக காப்புக்காடுகளிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் அநேக நடைமுறை சிக்கல்கள் உருவாகின என்றும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் TAMIN நிறுவனத்தின் பெருமளவிலான குவாரி மற்றும் சுரங்கங்கள் 19 குவாரிகள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாக அரசிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே பாதிக்கப்பட்டுள்ள குவாரி மற்றும் சுரங்க உரிமையாளர்களின் நலனை காத்திட மற்றும் அரசின் வருவாயை பெருக்கிட ஏதுவாக இவ்விதியில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.