சென்னை: ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் பவானி சாகர் அணை நீர்பிடிப்புப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் உள்ள நிலத்தை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு குத்தகைக்கு விட தமிழக அரசு 1967ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. பின்னர், 1980ஆம் ஆண்டு, பிறப்பிக்கப்பட்ட வன பாதுகாப்புச் சட்டத்தின்படி, வனப்பகுதிகளில் பயிர் சாகுபடி செய்வது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புலிகள் சரணாலயப் பகுதியான வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள், விலங்குகள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் சூரியசக்தி மின்வேலி அமைத்துள்ளதாகக் கூறி, டி.முருகவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையும் படிங்க:International tiger Day: சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு.!
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், கடந்த ஜூலை 22ஆம் தேதி கூட்டு ஆய்வு நடத்தப்பட்டதாகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சூரியசக்தி மின்வேலி முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாகவும், வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களும் விரைவில் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றும் உறுதி கூறப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:சூடுபிடிக்கும் நீதிபதி கலையரசன் குழு அறிக்கை: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்!