தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - புத்தாண்டு கொண்டாட்டம் 2021

TN Secretariat
தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்

By

Published : Dec 21, 2020, 6:42 PM IST

Updated : Dec 21, 2020, 7:55 PM IST

18:36 December 21

சென்னை: கடற்கரை, சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (டிச. 21) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. 

தமிழ்நாடு அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பதுடன், அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 

தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையடுத்து விரைவில் வரவிருக்கும் 2021ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில்,  டிச. 31 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. 

2021 ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, டிச. 31 அன்று இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சில வெளிநாடுகளில் கரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற இச்சூழ்நிலையில், நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். எனினும், அன்றைய நாள் இரவு நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. 

மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என்பதால், டிச. 31 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய நாள்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்துக்கும் முழு ஒத்துழைப்பை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: தஞ்சை, திருப்பத்தூருக்கு நிதி வழங்கிய அரசு

Last Updated : Dec 21, 2020, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details