அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசிற்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் அதிக அளவில் நிதி வருவாய் கிடைக்கும். மேலும், இந்த நிதியின் மூலம் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், ஆய்வு மேற்கொள்ளுதல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு போன்றவற்றால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என தெரிவித்திருந்தார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தால் ஐந்து வருடத்திற்கு தேவையான ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிதியை திரட்ட முடியும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 314 கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் கூறும்போது மாணவர்களின் தேர்வு கட்டணம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கான அங்கீகார கட்டணம் போன்றவற்றின் மூலமும் திரட்ட முடியும் என கூறியிருந்தார். மாணவர்களின் தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் போன்றவற்றை உயர்த்துவதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.