சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள நாட்களுக்கு தமிழகத்திற்கு தேவையான 24,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் எனவும், செப்டம்பர் மாதத்திற்கு திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்தது.
மேலும், தேசிய தென்னிந்திய நதிகள் ஒருங்கினைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தொடுத்திருந்த வழக்கையும் ஒன்றிணைத்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. முன்னதாக, நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு, காவிரியில் இருந்து உரிய தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு முறையாக பின்பற்றியுள்ளதா என்பது குறித்து விரிவான அறிக்கையை செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 31) உச்ச நீதிமன்றத்தில் 21 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றியுள்ளது எனவும், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான 15 நாட்களுக்கு 1,49,898 கன அடி நீரை திறந்து விட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினந்தோறும் 5,000 கன அடி நீரை திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனை உறுதி செய்யவும் தெரிவித்துள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசு சார்பில் குறுவை சாகுபடிக்கு 5,000 கனஅடி நீர் போதாது என்பதால், கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என புதிதாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கோரிக்கையை கர்நாடக அரசு மறுத்து, கர்நாடக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கான சாத்தியக்கூறுகள்:இதுவரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தாலும், குறுவை சாகுபடிக்கு இப்போது வழங்கப்படுகின்ற தண்ணீரின் அளவு போதாது என்பதால், விவசாயிகளின் உயிர் நீராக பார்க்கப்படுகின்ற காவிரி நீரை கூடுதலாக வழங்க வேண்டும் எனவும், அதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு எடுத்து வைக்கவுள்ளதாகவும், குறிப்பாக உரிய நேரத்தில் நெற்பயிர்களுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை என்றால் பயிர்கள் சேதமடைவதோடு, அதிகளவிலான பொருட்சேதம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருவதாலும், செப்டம்பர் 5 முதல் 10ஆம் தேதி வரை மிக அதிகனமழை இருப்பதால் கட்டாயமாக தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது எனவும், இந்த தகவல் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் பரிமாறப்பட்டிருக்கும் எனவும், அது உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கபட்ட அறிக்கையிலும் குறிப்பிடபட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் தண்ணீர் பங்கீட்டில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தமிழகத்திற்குத் தேவையான தண்ணீர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ், ஆங்கில எழுத்துகளை தலைகீழாக எழுதி வியக்க வைக்கும் தூத்துக்குடி இளம்பெண்!