குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக ஐந்து கிலோ அரிசி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவைக்கு ஏற்ப புழுங்கல் அரிசி, பச்சரிசி, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜுன் மாதத்தில் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாட்டில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு (AAY) மாதம்தோறும் அதிகபட்சம் 35 கிலோ அரிசியும், 93 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு (PHH) நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசியும், எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு (NPHH) 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றன.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கு ஏற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம். மேலும் கரோனா பரவலின் இரண்டாம் அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே, ஜுன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா ஐந்து கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.