சென்னை:தொடக்கக்கல்வித்துறையில் சார்நிலைப் பணிகளின் சிறப்பு விதிகளில் ஒன்பதாம் விதிகளில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஒர் அலகு என உள்ளதனை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து, உரிய பரிந்துரையினை அரசுக்கு அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரை தலைவராகவும், உறுப்பினர்களாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கையை அளித்தன. அதில் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரே பதவி உயர்வு வாய்ப்பான நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை.
ஒவ்வொரு ஒன்றியமும், மாவட்டமும் பதவி உயர்வில் சீரற்ற நிலை காணப்படுகிறது. ஒரு சில ஒன்றியங்களில் பதவி உயர்வும், ஒரு சில மாவட்டங்களில் 19 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாத நிலையும் ஏற்படுகிறது. ஒரு ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஒன்றியத்திற்கு அல்லது மாவட்டத்திற்கு மாறுதலில் செல்லும்போது ஊதியத்தில் எவ்வித இழப்பும் ஏற்படாவிட்டாலும், ஒரு பட்டதாரி ஆசிரியர் தன்னுடைய முன்னுரிமையை இழந்து அடுத்த ஒன்றியத்திற்கோ, மாவட்டத்திற்கோச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் மாநில அளவில் முன்னுரிமை கடைபிடிக்கப்படுகிறது. தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கோ, மாவட்டத்திற்கோச் செல்ல இயலாத நிலை உள்ளது.
இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், பிறகு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற முறையிலும், நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர் என்ற முறையில் மாநில முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாளை அடிப்படையாகக் கொண்டு, முன்னுரிமை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.