சென்னை: தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.02) நடைபெற்றது. அதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை ந.அருள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, முதலில் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதுடன், அதன் பின் ஆங்கிலத்திலும், தத்தம் தாய்மொழிகளிலும் (5:3:2) என்ற வீதத்தில் அமையப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், "தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக எதிர்வரும் டிசம்பர் 21ஆம் தேதி முதல் நடத்தப்படும் ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்ச்சியில், வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் முதன்மையாக அமைவதை வலியுறுத்தும் வண்ணம் பேரணி அல்லது விழிப்புணர்வுக் கூட்டங்கள், வணிகர் சங்கங்களுடன் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும்" என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்.