தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அபார வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு 1.10 கோடி பரிசு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - Indian Hockey players

ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஹாக்கி 2023
Hockey 2023

By

Published : Aug 13, 2023, 9:27 AM IST

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 7வது ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023’ பரிசளிப்பு விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் முன்னிலையில் ஆசிய ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பையை வழங்கி, இந்திய அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து வாழ்த்தினார்.

மேலும், வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

7வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 போட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்திய இப்போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் மலேசியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்புகழ் பெற்ற ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் (Upgraded Hockey Stadium), ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் (Olympic Standard New Synthetic Turf) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் (Kalaignar Centenary Pavilion) ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூலை 28 அன்று திறந்து வைத்தார்.

இதையும் படிங்க:சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ரத்து!

சென்னை மெரினா கடற்கரையில் கடந்த ஜூலை 20 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்து, “பொம்மன்" இலச்சினையை வெளியிட்டார். மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் "பாஸ் தி பால்" கோப்பை (PASS THE BALL TROPHY TOUR) சுற்றுப் பயணத்தையும் தொடங்கி வைத்தார்.

"பாஸ் தி பால் கோப்பை" சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆகஸ்ட் 1 அன்று சென்னை வந்தடைந்தது. இந்த கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் ஆகஸ்ட் 2 அன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று (ஆகஸ்ட் 12) சென்னை, எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023-க்கான இறுதிப் போட்டியில் இந்தியா - மலேசியா நாடுகளுக்கிடையேயான ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்து, இரு அணிகளின் தலைவர்கள், வீரர்கள் மற்றும் நடுவர்களை வாழ்த்தி போட்டியினை பார்வையிட்டார்.

பின்னர், “ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023" இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி, இந்திய அணி வீரர்களுக்கு தங்கப் பதக்கங்களை அணிவித்து வாழ்த்தினார்.

இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ மேகநாத ரெட்டி, சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம், ஹாக்கி இந்தியா தலைவர் டாக்டர் திலீப் திர்கி, ஆசிய ஹாக்கி சம்மேளனத்தின் நிர்வாகி தைமூர், சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆசிய ஹாக்கி இறுதிப்போட்டி: 4வது முறையாக சாம்பியனான இந்திய அணி!

ABOUT THE AUTHOR

...view details