தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீகார் நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை? - ஆளுநர் மாளிகை மறுப்பு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக, வடமாநிலத் தொழிலாளர்களை தாக்கியதாக போலியான வீடியோ வெளியிட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக பரவிய செய்திக்கு, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 12, 2023, 10:56 PM IST

மதுரை:கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத் தொழிலாளர்களை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய சில வீடியோக்கள் தமிழ்நாட்டை பரபரப்புக்குள்ளாக்கியது. இந்த வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தாக்கப்பட்டவர்கள் பீகார் மாநிலத் தொழிலாளர்கள் என மற்றுமொரு வீடியோ வெளியாகி நாட்டின் அனைவரது பார்வையையும் நமது தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களுக்கும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக புலம்பெயர்ந்து தமிழ்நாடு வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக பிற மாநிலத்தவர்களிடையே ஒரு எண்ணம் மேலோங்கியது.

இதனிடையே, அவற்றை தீவிர விசாரணை மேற்கொண்டு, அவற்றின் உண்மையை வெளிக்கொண்டு வரும் பணியில் தமிழ்நாடு அரசுடன் மாநில காவல்துறையும் தீவிரமாக செயல்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடெங்கும் பரவியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பீதி ஏற்பட்டது.

இதனால், கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தங்கி வேலை செய்து வந்த வட மாநிலத்தவர்கள் தங்களின் மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட்டதை தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடித்தது. மேலும், இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்புவோரின் மீது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, இதற்காக சிறப்புக் குழுக்கள் அமைத்து போலியான வீடியோக்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட 4 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிந்து அதிரடி காட்டியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் விதமாக, போலியான வீடியோ வெளியிட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப் (32) என்பவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அவரை ஓராண்டு சிறையில் அடைக்க என்எஸ்ஏ (National Security Agency)பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதாக நேற்று செய்திகள் பரவின.

இதனைத்தொடர்ந்து, 'பீகாரைச் சேர்ந்த தனிநபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் பரிந்துரைத்ததாக தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. ஆளுநர் அப்படி எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது' என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று (மே.12) அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீரன் பட பாணியில் ரியல் சம்பவம்.. கொல்கத்தாவில் முகாமிட்டு குற்றவாளிகளைப் பிடித்த சென்னை போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details