தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நலிந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்காக காத்திருக்கிறாரா ஆளுநர் ?

சென்னை: பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால்தான் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவேன் என்று ஆளுநர் காத்திருக்கிறாரா என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

TN Governor will have serious repercussions on 7.5 per cent priority  bill approving  said k.s.azhagiri
TN Governor will have serious repercussions on 7.5 per cent priority bill approving said k.s.azhagiri

By

Published : Oct 23, 2020, 1:34 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க தமிழ்நாடு ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஏகமனதாக நிறைவேற்றிய மசோதாவிற்கு ஆளுநர் இன்றுவரை ஒப்புதல் அளிக்க முன்வரவில்லை. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு அவகாசம் கோரியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயல்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு அரசுப் பள்ளி மாணவர்களில் எட்டு பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லுரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், 7.5 விழுக்காடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்துவது தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்வி குறியாக்கிவிடும்.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அமைசச்ர்கள், எதிர்க்கட்சிகள் கொடுக்கும் எந்த அழுத்தத்திற்கும் அசைந்து கொடுக்க ஆளுநர் தயாராக இல்லை. அரசமைப்பு சட்டப்படி, அமைச்சர்கள் குழு எடுக்கும் முடிவுகளையும் சட்டம் இயற்றப்படுவதற்கான மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால்தான் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவேன் என்று ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது சமூக நீதியைக் குழி தோண்டி புதைக்கிற செயல்.

எனவே, தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details