சென்னை:தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்தால் நிராகரிப்பதாக பொருள் எனவும், சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதுபோல், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கின்றதா என்பதை சரி பார்க்கும் பொறுப்பும் உள்ளது எனத் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் யுபிஎஸ்சி தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கான நான்காம் கட்ட நேரடியான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்வர்களின் கேள்விக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் அளித்து பேசும்போது, ''குடிமைப்பணி உங்களுக்கு வளர்ச்சியை கொடுப்பதுடன் மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பாகவும் இருக்கும். 60 வயதில் உங்கள் பணி நிறைவடையும். ஆகையால், குறைவான வயது இருக்கும் போதே விரைவாகப் பணியை பெற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், ''ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதனை நிராகரிப்பதாக பொருள்’’ என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும் ''வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தவறான நிதியின் மூலம் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தடுப்பதற்கான போராட்டத்தினை நடத்துவதற்கு அதனை பயன்படுத்துகின்றனர்'' என வன்மையாக குற்றம்சாட்டியுள்ளார்.
''தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. கேரளாவில் குடிமைப் பணியைத் தொடங்கி மத்திய அரசு பணிகளுக்குச் சென்றேன். நாட்டின் பிரச்னைகள் உள்ள பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். தமிழ்நாட்டில் அமைதியான சூழலில் பணியாற்றுகிறேன். தமிழ்நாட்டின் மொழி தமிழ் மொழி, வளம் மிக்க மொழி. அதன் தொன்மை வியப்பை தருவதாக உள்ளது. ஆளுநராக இங்கு மகிழ்ச்சியுடன் பணியாற்றுகிறேன். இங்குள்ள மக்கள் எங்கு சென்றாலும் மிகுந்த வரவேற்பினை அளிக்கின்றனர். அது மகிழ்ச்சி அளிக்கிறது'' என யுபிஎஸ்சி தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஊக்குவிக்கும்படி பேசினார்.
மேலும் ''நாட்டின் சட்டதிட்டங்களை வரையறுக்கும்படி, இந்திய அரசியல் அமைப்பை பாதுகாப்பதே ஆளுநரின் முதல் கடமை. மத்திய அரசோ, மாநில அரசோ இந்திய அரசியல் அமைப்பின்படியே இயங்க முடியும். இந்தியாவில் மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொது பட்டியல் உள்ளது. பொது பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றவில்லை என்றால் மாநில அரசு சட்டம் இயற்றலாம். மத்திய அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால், அது மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும்'' எனக் கூறினார்.
பின்னர் ஆளுநர் மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி ஆளுநரின் பணி குறித்து கேள்வி எழுப்பினார்.
அது பதிலளித்து பேசிய அவர், "ஆளுநரின் உச்சப்பட்ச பொறுப்பே அரசியலைமைப்பை பாதுகாப்பது. மாநிலமோ, மத்திய அரசோ இரண்டு அமைப்புகளுமே அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். அரசியலமைப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
ஏழாவது அட்டவணையில் மத்திய, மாநில அரசுகள் குறித்த சட்டங்கள், மத்திய அரசின் அதிகாரம் என்ன, மாநில அரசு என்னென்ன சட்டங்கள் இயற்றலாம், ஒத்திசைவு பட்டியலில் உள்ள விஷயத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றலாம், மத்திய அரசு சட்டம் இயற்றி இருக்காவிட்டாலும் கூட மாநில அரசு சட்டம் இயற்றலாம், ஆனால் அது மத்திய அரசின் சட்டத்திற்கு இசைவாக இயற்றப்பட்டிருக்க வேண்டும் போன்றவை தெளிவாக உள்ளன.
சட்டமன்றத்தில் ஒரு கட்சிக்கு முழு மெஜாரிட்டி இருக்கலாம். அதை வைத்து அதில் எந்த மசோதவையும் நிறைவேற்றலாம். ஆனால் அதை சட்டம் ஆக்கும் இடத்தில் தான் மாநில ஆளுநரின் பங்கு வருகிறது. ஆளுநரின் பணி என்ன? அந்த இயற்றப்பட்ட சட்டம் மாநில அரசின் அதிகாரத்தை தாண்டி போகாமல் உள்ளதா என்பதை கண்காணிப்பது ஆகும். அது எல்லைத் தாண்டி இருந்தால் ஆளுநரின் பொறுப்பு அந்த இடத்தில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது ஆகும்.
மாநில சட்டமன்றம், மாநில சட்ட மேலவை போன்றவை குறித்து குறிப்பிட்டுள்ள அரசியலமைப்பில், மாநில சட்டமன்றம் என்றாலே அதில் ஆளுநரும் அங்கம்தான் என்று சொல்லப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 200 ஆவது விதியின்படி ஆளுநருக்கு 3 விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அது சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்.