சென்னைமயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, துக்ளக் குருமூர்த்தி, நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் ஆர்.என் ரவிக்கு ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு ராமகிருஷ்ணா மிஷன் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் மேடையில் பேசிய குருமூர்த்தி கூறுகையில், "ஞானமும் பதவியும் ஒன்று சேராது. இவரை போன்றவர்கள் ஆளுநராக வருவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தில் பல ஆண்டுகள் இருந்தும் நம் கலாசாரம் பண்பு காப்பற்றப்பட்டிருப்பதற்கு காரணம் ஞானிகள் தான். நமது நாட்டில் 60-70 கோடி நபர்கள் மற்றவர்களை சார்ந்து உள்ளனர்.
வெளிநாடுகளில் 55% முதல் திருமணங்கள் விவகாரத்தில் முடிகிறது. 67% இரண்டாவது திருமணங்கள் விவகாரத்தில் முடிகிறது. 28% திருமணங்கள் மட்டுமே நீடிக்கிறது. வெளிநாடுகளில் வல்லரசு நாடுகளில் தற்போது ஏற்பட்டு இருக்கக்கூடிய மிகப்பெரிய சிக்கலே வயதானவர்களை பார்த்துக்கொள்வதில் தான். இந்தியாவில் இதுபோன்ற சூழல் இல்லாமல் இருப்பதற்கு ஒரே காரணம் ஞானிகள் தான்" என்று பேசினார்.
சனாதனமும் மதமும் வேறு வேறு:தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "அறிவியல், தொழில் நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் இந்த உலகம் பாதுகாப்பற்ற நிலையில் தான் உள்ளது. சனாதனம், சனாதன தர்மம் படைப்புகளின் ஒருங்கிணைந்த ஒற்றுமையாக உள்ளது.
அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிகப்பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அது மிகப்பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த உலகத்தை அழிக்கக்கூடிய சக்தி பல நாடுகளிடம் தற்போது உள்ளது.
நீண்ட காலமாக வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்ததால் பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் காலசாரத்திலும் நாம் பெரிய அளவில் இழப்பைச் சந்தித்தோம். வெள்ளையர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறிய பின்னர் இந்தியாவில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை தர்ம விதிகளில் இருந்து திசை திருப்பப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும், வெளியே போதிக்கப்பட்ட மதச் சார்பின்மைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது.சனாதன தர்மம் குறித்து பேசும்போது அதனை மதத்தோடு ஒப்பிட்டுப்பேச வேண்டாம். சனாதனமும் மதமும் வேறு வேறு.
மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தைப் பின்பற்றி உள்ளனர். தற்போது நம்முடைய நாடு விழித்துக் கொண்டுள்ளது. நாட்டின் முதுகெலும்பு என விவேகானந்தர், மகாத்மா காந்தி கூறிய ஆன்மிக வழியில் சிந்திக்க செயல்படத் தொடங்கியுள்ளது. அனைத்து கடவுள்களுக்கும் இடங்கள் உள்ளன.
ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. ஏன் அது தர்மமே இல்லை. அனைத்து மதங்களுக்கான இடமும் இங்கு உள்ளது. விவேகானந்தரின் கனவு பாரதத்தை உருவாக்க தர்மத்தை வளர்க்க வேண்டும். அதற்கு ஆன்மிகம் மீதான வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்லும் பாதையில் இதனையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' பஜ்ஜி போடுவதை வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம் - சிதம்பரம்