சென்னை:உத்தரகாண்ட் மாநிலம் உருவான தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் இன்று (நவ.9) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, "மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினத்தை, அந்தந்த மாநில அரசுகள் கொண்டாடும். ஆனால், பிரதமரின் உத்தரவுப்படி, அனைத்து மாநில தினத்தையும், அனைத்து மாநிலங்களும் கொண்டாடுகின்றன.
காலணிய ஏகாதிபத்தியத்தின்போது அனைத்து இந்தியாவும் சேர்ந்து எதிரி நாடுகளை எதிர்த்துப் போராடியது. குறிப்பாக, பிரிட்டிஷை எதிர்த்து மொத்த இந்தியாவும் ஒருங்கிணைந்து நின்றது. 1801-இல் சிவகங்கையிலிருந்து மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து 20 வருடம் போராடினர். ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்தியர்கள் ஒன்றாக இருந்தனர்.
ஆனால், ஆங்கிலேயர்கள் அவர்களிடையே பிரிவை ஏற்படுத்தினர். அந்தப் பிரிவு வகுப்புவாத பிரிவாக இருந்தது. அனைத்தையும் கடந்து ஒவ்வொரு முறை பிரச்னை வந்த போதும் இந்தியா ஒரு முகமாக இருந்தது. அதன்பின், அரசியல் மாநில அளவில் மாறியது. மாநில அரசியலால் பயன் அடைந்தவர்கள், மேலும் மாநிலங்களைப் பிரிக்கத் தொடங்கினர். மாநிலங்களில் வகுப்புவாதத்தால் பிரிந்த மக்கள், தங்களை அந்த அடையாளத்தோடு குறிப்பிடத் தொடங்கினர். இங்கு இருக்கக் கூடிய மலையாளிகள், தெலுங்கர்கள் தங்களை சிறுபான்மைகளாக குறிப்பிடுகிறார்களே தவிர, இந்நாட்டின் குடிமக்களாக கருதுவதில்லை.
தமிழ்நாடும், கர்நாடகாவும் காவிரி நீருக்காகப் போராடுகின்றன. நம்மால் அதை ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால், சுதந்திரம் பெற்றபோது ஒரே நாடாக இருந்தோம். அப்போது, இது போன்ற பிரச்னை இல்லையே, பாரதம் ஒரு நாடு என்ற உணர்வு மங்கி வருகிறது. தமிழ்க் கலாச்சாரம், மலையாள கலாச்சாரம் என்றெல்லாம் சொல்கின்றனர். இவையெல்லாம், 1926-க்கு முன்பு என்ன கலாச்சாரமாக இருந்தது எனச் சொல்ல முடியுமா எனக் கேட்டால் பதிலில்லை.
மாநிலங்கள் பிரிந்தது ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான். நம் பாரத கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தது. கன்னியாகுமரியிலிருந்து வடக்கு நோக்கி கிளம்பினால் ஒவ்வொரு 50கிமீ-க்கும் கலாச்சாரம் மாறும். ஒவ்வொரு 50 கிமீ-க்கும் மொழி மாறும். வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியா என்கின்றனர். வேற்றுமையே இல்லாததுதான் பாரதம் என்பதை மக்கள் உணர வேண்டும்.