சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு, ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.
அந்த வழக்கானது கடந்த நவம்பர் 20ஆம் தேதி திங்கள்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளது குறித்து, பல்வேறு கேள்விகளைக் கேட்டது. அந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆளுநர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்கின் விசாரணை வருகிற வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவி, இன்று (நவ.25) மாலை 5.15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து அவசரமாக டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ஆளுநருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் உடன் செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் நாளை (நவ.26) இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மீண்டும் சென்னை திரும்புவதாகவும் கூறப்படுகிறது.