தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி.என்.பி.எஸ்.சி தலைவரின் தகுதி என்ன? தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்! - TN governor R N Ravi

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை எந்த தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு அனுப்பிய கோப்பையை அரசுக்கே திருப்பி அனுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தலைவரின் தகுதி குறித்து விளக்கம் கேட்ட தமிழ்நாடு ஆளுநர்
டி.என்.பி.எஸ்.சி தலைவரின் தகுதி குறித்து விளக்கம் கேட்ட தமிழ்நாடு ஆளுநர்

By

Published : Aug 22, 2023, 12:26 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனராக பணிபுரிந்த சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது.

எனவே, இதற்காக தலைவர் பதவியில் யாரையும் நியமிக்காமல் மனிதவள மேம்பாட்டு துறையும் இருந்து வந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் பதவியில் இருந்து சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற பின்னர் அவரை தலைவராகவும், அவருடன் சேர்த்து 10 உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு அரசு பரிந்துரை கடிதத்தை அனுப்பியது.

இந்நிலையில், தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தார். டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. ஆனால், தற்போது அதில் 4 உறுப்பினர் பதவிகள் மட்டுமே நிறப்பப்பட்டு உள்ளது. அதில் ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார்.

பல மாதங்களாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்து வரும் நிலையில், டி.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கும் பெயர்களை தமிழக அரசு ஆளுநருக்கு கோப்பு மூலம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், சைலேந்திரபாபு தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு மீண்டும் தமிழக அரசுக்கு கோப்பை திருப்பி அனுப்பி இருக்கிறார் ஆளுநர். மேலும் அவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எதன் அடிப்படையில் இவர்களை தகுதி வாய்ந்தவர்கள் என தேர்வு செய்தீர்கள் என கேள்வியும் எழுப்பி உள்ளார்.

மேலும் வெளிப்படை தன்மையுடன் பணியாளர் தேர்வாணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரம் செய்யப்பட்டதா எனவும், இவர்களை தேர்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்கள் எனவும், அவர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் இவர்களை தேர்வு செய்தனர் என்பது குறித்து விளக்கமான கோப்புகளை அளிக்குமாறும் அதில் கூறியுள்ளார்.

மேலும், சுதந்திர தின விழாவின் போது உரை நிகழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 55 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது போன்ற நிலையில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை நிரப்பினால், அரசு பணிகளுக்கு தேவையான ஆட்களை நியமனம் செய்யும் பணிகள் வேகம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடிவி தினகரன் ட்வீட் :

மேலும், ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எந்த அடிப்படையில் இறுதி செய்யப்பட்டனர்? உறுப்பினர்கள் தேர்வில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறைப்படி பின்பற்றப்பட்டதா? போன்ற கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக ஆட்சியமைந்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவி காலியிடமாக இருப்பதால் அந்த ஆணையம் நடத்தும் தேர்வில் அடிக்கடி குளறுபடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வேலைவாய்ப்புக்கான தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், விதிகளை மீறி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை உடனடியாக வழங்கி, அவரின் ஒப்புதலை பெற்று காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை முறைப்படி நிரப்ப திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:மருத்துவ படிப்புகளுக்கு பி.யு.சி. தகுதியில்லையா? பி.யு.சி. படித்தவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details